ஐரோப்பாவில் இருக்கும் குரோஷியாவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அங்குள்ள டுப்ரோவ்னிக் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் சூட்கேஸ் கொண்டு வரக்கூடாது என அறிவிப்பு வெளியானதோடு மீறி கொண்டு வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் சக்கரம் வைத்திருக்கும் சூட்கேஸ்களை பளிங்கு கற்கள் மீது இழுத்துச் செல்வதால் சத்தம் ஏற்பட்டு ஒலி மாசுபாடு ஏற்படுவதோடு தங்களின் தூக்கம் கெடுவதாக நகரவாசிகள் பலர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இதையடுத்து நகரத்தின் மேயரான Mato Frankovic சூட்கேஸ்களை எடுத்து வரக்கூடாது என தடை விதித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தடையை மீறுபவர்களுக்கு 288 டாலர் (இந்திய மதிப்பில் 23,643) அபராதம் என்றும் அறிவித்துள்ளார். அவர்கள் கொண்டுவரும் சூட்கேஸ்களை நகரத்திற்கு வெளியே சேகரிக்கப்பட்டு அவர்கள் தங்கியிருக்கும் விலாசத்திற்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சுற்றுலா தளங்களை பார்வையிடும் போது சரியான முறையில் உடை அணிந்து இருக்க வேண்டும் என்றும் மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.