தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் உள்ள மட்டக்களப்பு-திரிகோணமலைக்கு இடையே இன்று அதிகாலை 3:30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களிலும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, கடலூர், நாகை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திருப்பூர், தேனி மற்றும் தஞ்சை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று பிப்ரவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகள் போன்ற பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன் பிறகு பிப்ரவரி 3-ஆம் தேதி தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிப்ரவரி 4-ம் தேதி குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.