
கேரள மாநிலத்திலுள்ள போக்குவரத்து துறை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு புதிய விதிமுறைகளை அளித்துள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் காரின் முன் பகுதியில் இருந்த இரண்டு வயது குழந்தை ஏர்பேக் அமுக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அனைவரையும் பெரிதும் பாதித்துள்ளது. இதைத்தொடர்ந்து கேரளா அரசு கார்,பைக் போன்ற வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த உள்ளது.
இந்த விதிமுறையில் கூறப்பட்டதாவது, இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை கூட்டி செல்லும்போது கட்டாயமாக குழந்தைகளுக்கும் தலைக்கவசம் அணிய வேண்டும். மேலும் குழந்தைகளை வைத்து பைக்கில் பயணம் செய்யும் பெற்றோர்கள் குழந்தைகளோடு சேர்த்து தங்களை இணைத்து பெல்ட் போட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில் பைக்கில் பயணம் செய்யும்போது குழந்தைகள் தூங்குவது வழக்கமாகும், இதனால் விபத்து ஏதும் ஏற்படாமல் பாதுகாக்க பெல்ட் அணிய வேண்டும்.
காரில் பயணம் செய்வோர் 4 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை முன்னிருக்கையில் அமர்த்தக் கூடாது. மேலும் பின் இருக்கைகளில் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட குஷன் அமைப்பு கொண்ட இருக்கைகளும் மற்றும் சீட் பெல்ட்டுகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு ஏதாவது விபத்து ஏற்பட நேர்ந்தால் முழு பொறுப்பும் வாகன ஓட்டுனரையே சேரும். இந்த விதிகளை மீறி பயணிப்பவர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் தகுந்த தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு கேரள போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது.