சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பங்கேற்றனர். மேலும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் அமைச்சர் பியூஸ் கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை அடக்கப்படும் சிலையை நினைவு பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த மாநாட்டில் பெகட்ரான் நிறுவனத்துடன் ரூ 1000 கோடிக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. 1000 கோடியில் மின்னணு பொருள் உற்பத்தி ஆலை மூலம் 8000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் கிருஷ்ணகிரியில் உள்ள தனது மின் ஆலையை ரூபாய் 12,082 கோடியில் விரிவாக்கம் செய்கிறது டாடா நிறுவனம். டாடா நிறுவன உற்பத்தி ஆலை விரிவாக்கத்தின் மூலம் 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ரூபாய் 6,180 கோடியில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. காஞ்சிபுரத்தில் பெட்ரோலிய, மின்சார வாகன கார், பேட்டரி தயாரிப்பு நிலையத்தை ஹூண்டாய் நிறுவுகிறது. சென்னை ஐஐடியுடன் இணைந்து ஹைட்ரஜன் எரிபொருள் புத்தாக மையத்தையும் ஹூண்டாய் அமைக்க உள்ளது.

ரூ.177 கோடியில் குவால்காம் நிறுவன வடிவமைப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூபாய் 177 கோடியில் அமைந்துள்ள குவால்காம் நிறுவன மையம் மூலம் 1600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். செங்கல்பட்டு மாவட்டத்தில் கோத்ரேஜ் நிறுவன உற்பத்தி ஆலை அமைக்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 515 கோடியில் 446 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோத்ரெஜ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

வியட்நாம் நாட்டின் முன்னணி மின்வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் தமிழகத்தில் ஆலையமைக்கிறது.  ரூபாய் 16,000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைக்கிறது வின்ஃபாஸ்ட் நிறுவனம். தூத்துக்குடியில் அமைய உள்ள ஆலையில் ஆண்டுக்கு 1.5 லட்சம் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். நடப்பாண்டிலேயே ஆலையின் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. புதிய மின்சார வாகன ஆலை அமைக்கப்படுவதால் சுமார் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

காஞ்சிபுரத்தில் அமைய உள்ள சோலார் எனர்ஜி நிலையத்தின் மூலம் 350 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அமெரிக்க நிறுவனமான பர்ஸ்ட் சோலார் நிறுவனத்துடன் 5,600 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

JSW  நிறுவனத்துடன் 10,000 கோடி மதிப்பில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தூத்துக்குடி, நெல்லையில் அமைய உள்ள JSW இரும்பு தயாரிப்பு நிறுவனம் மூலம் 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். டிவிஎஸ் நிறுவனத்துடன் 5000 கோடி மதிப்பில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சீன நாட்டு மிட்சுபிஷி நிறுவனத்துடன் 200 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.