ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளது என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பங்கேற்றனர். மேலும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் அமைச்சர் பியூஸ் கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை அடக்கப்படும் சிலையை நினைவு பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த மாநாட்டில் பல நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் காணொளி மூலம் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ஆற்றிய  உரையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழகம் அறிவுசார் பாரம்பரியத்திற்கு புகழ்பெற்ற மாநிலம். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தமிழகத்தில் ரூபாய் 35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலை தமிழ்நாட்டில் அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது. மாநாட்டிற்கு நேரில் வராதது வருத்தம் அளிக்கிறது” என தெரிவித்தார்.