2023 – 24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மகளிருக்கான உரிமை தொகை, சிறுகுறு  தொழிலாளர்களுக்கு சலுகை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

முன்னதாக கடந்த ஒன்பதாம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. பெண்களுக்கான உரிமை தொகையாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது தொடங்கும் ? என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளது.

அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது, சிறு – குறு தொழிலாளர்களுக்கு சலுகை உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிநிலைமையை சீர்செய்வதற்கு அரசு எடுத்து வரும் முயற்சிகள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, எதிர்கால நிதி மேலாண்மை குறித்து விவரங்களும் நிதிநிலை அறிக்கை உரையில் இடம்பெறும்.

பட்ஜெட் தாக்களுக்கு பிறகு பேரவை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.அதைத்தொடர்ந்து பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது ? வேளாண் நிதி அறிக்கை தாக்கல் உள்ளிட்டவற்றை சபாநாயகர் அப்பாவு அறிவிக்க உள்ளார்.