டி20 உலகக்கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில், பலரும் எதிர்பார்க்காத மிகப்பெரிய ‘டுவிஸ்ட்’ அரங்கேறியுள்ளது. ‘மகாபலி’ ஆஸ்திரேலிய அணி, முதல் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்று நடைபெற்ற அயர்லாந்து – ஜிம்பாப்வே இடையிலான ஆட்டம் மழையினால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 5 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு கெத்தாக முன்னேறியது.

ஏற்கனவே இலங்கை அணி தகுதி பெற்றுவிட்ட நிலையில், வெறும் 2 புள்ளிகளுடன் இருந்த ஆஸ்திரேலியாவின் கதவு அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. கடந்த நான்கு ஐசிசி தொடர்களில் (டி20 உலகக்கோப்பை 2022, 2024, 2026 மற்றும் சாம்பியன்ஸ் டிராபி) ஆஸ்திரேலியாவுக்குப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்திய ரசிகர்களின் ‘சாபம்’ பலித்துவிட்டதாக இணையத்தில் மீம்ஸ்கள் பறக்கின்றன. குறிப்பாக ஜிம்பாப்வேயிடம் அடைந்த அதிர்ச்சித் தோல்வியும், இலங்கையிடம் வாங்கிய அடியும் ஆஸ்திரேலியாவை அதலபாதாளத்திற்குத் தள்ளிவிட்டது.

51 ஆண்டுகால ஐசிசி வரலாற்றில், ஆஸ்திரேலியா தொடர்ந்து மூன்று முறை அரையிறுதிக்குக் கூடத் தகுதி பெறாமல் வெளியேறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.