சிரிப்பு பாதி, மருந்து பாதி என்பது வடிவேலு விஷயத்தில் உண்மையாகியுள்ளது. 11 வயது சிறுமி கோமா நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது, அவருக்குப் பிடித்த வடிவேலு காமெடிகளைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்துள்ளனர்.
ஆச்சரியப்படும் விதமாக, அந்தச் சிறுமி மெல்ல மெல்ல கோமாவில் இருந்து மீண்டு வந்துள்ளார். “என் கலைக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது இதுதான்” என வடிவேலுவே நெகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியில் இதனைப் பகிர்ந்துள்ளார்.
இதேபோல், தேனி மாவட்டத்தில் தற்கொலை செய்ய முடிவெடுத்த ஒரு பெண், தூக்குப் போட முயன்ற கடைசி நிமிடத்தில் டிவியில் ஓடிக்கொண்டிருந்த வடிவேலு காமெடியைப் பார்த்துத் தனது முடிவை மாற்றிக்கொண்ட சம்பவம் இன்னும் ஆச்சரியமானது.
போலீஸ் அதிகாரி மூலம் இதையறிந்த வடிவேலு, அந்தப் பெண்ணுடன் நேரடியாகப் பேசி அவருக்குத் தன்னம்பிக்கை கொடுத்துள்ளார். ஒரு கலைஞனின் நகைச்சுவை, மருத்துவத்தாலும் சட்டத்தாலும் முடியாத சில மாற்றங்களை மனித மனதில் நிகழ்த்தியுள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
