தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் போன்றவற்றில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவாக தேர்வுகளை நடத்தி முடிக்கவும், முறைகேடுகளை தவிர்க்கும் விதமாகவும் தமிழக அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் மனித வள மேம்பாட்டு செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.

,அதன் பிறகு பள்ளி கல்வித்துறை ஆணையர், தொழில்நுட்ப கல்வி ஆணையர், கல்வியியல் துறை இயக்குனர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் 2 ஆசிரியர் தேர்வு வாரிய குழுவில் இடம் பெறுவர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முறையாக சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்யப்பட்ட பிறகு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் மாநில பல்கலைக்கழகங்களுக்கான துணை பேராசிரியர்களும் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்படுகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரிகளின் எண்ணிக்கை 71-க அதிகரித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் டேட்டா அட்மினிஸ்ட்ரேஷன்ஸ், டேட்டா அன்லிஸ்ட்ஸ், ப்ரோகிராமர்ஸ் போன்றவர்களும் அடங்குவர். இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர் லா உஷா கடந்த 3-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு என தனியாக கட்டிடம் ஒன்று அமைய இருப்பதாகவும், ஆசிரியர் தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை மேம்படுத்தும் வகையில் புதிதாக குழு ஒன்று அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.