திருமணத்துக்கு பின் குடும்பம், வீடு, சமையலறை என வாழும் சாதாரண பெண்ணின் வாழ்க்கை கதைக்களம் தான் “தி கிரேட் இந்தியன் கிட்சன்”

கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பரதம் கற்றுக்கொண்டு சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு பள்ளியில் ஆசிரியராகவுள்ள  ராகுல் ரவீந்திரன் என்பவரை பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்துக்கு அடுத்து அவர் தனது மாமியார் வீட்டில் ஒரு குடும்ப பெண்ணாக இருந்து வருகிறார். இந்த நிலையில் மாமியார் தன் இளைய மகளின் பிரசவத்துக்காக வெளிநாடு செல்கிறார்.

அப்போது இருந்து குடும்ப பொறுப்பு அனைத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் கவனித்து கொள்கிறார். அதன்பின் ஒருக்கட்டத்தில் இந்த வாழ்க்கை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சலிப்பை ஏற்படுத்தும் நிலையில், நடன ஆசிரியர் பணிக்கு செல்ல விருப்பப்படுகிறார். ஆனால் இதற்கு கணவர் மற்றும் மாமனார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

எனினும் எதிர்ப்பை மீறி அவர் வேலைக்கு போக முயற்சிக்கிறார். ஆகவே இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் விருப்பப்படி வேலைக்கு சென்றாரா..?, சமயலறையிலிருந்து அவருக்கு விடுதலை கிடைத்ததா..? என்பதே படத்தின் மீதிக் கதை ஆகும். இந்திய பெண்மணிகள் பெரும்பாலும் சமையல் அறையிலேயே தங்களது வாழ்நாட்களை கழித்து விடுகின்றனர் என்பதை இந்த படத்தின் வாயிலாக கூற முயன்றிருக்கிறார் டைரக்டர் ஆர்.கண்ணன்.