
ஸ்பெயின் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஓவியோ நகரத்தில் உள்ள ஒரு வீட்டில், 3 சிறுவர்கள் பல மாதங்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது, 8 வயது இரட்டையர்கள் மற்றும் 10 வயது சிறுவன் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் டிசம்பர் 2021 முதல் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கொடூர செயலுக்குப் பின்னால் 53 வயதான ஒரு ஜெர்மன் ஆண் மற்றும் 48 வயதான பெண் உள்ளதாகவும், அவர்கள் இருவரும் இரட்டைக் குடியுரிமை (ஜெர்மனி மற்றும் அமெரிக்கா) பெற்றவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், குழந்தைகள் வீட்டு தோட்டத்திற்குள் செல்ல கூட அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கூண்டுகளில் தூங்கச் சொல்லப்பட்டதோடு, டயப்பர்கள் மற்றும் முகமூடிகளை கட்டாயமாக அணியும்படி கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர்.
இது குறித்து ஏற்கனவே அருகிலிருந்த ஒருவர், அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாததை கவனித்து போலீசில் புகார் செய்திருந்தார். ஆனால் அந்த புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின்னர் தற்போது ஏற்பட்ட மின் தடையின்போது, போலீசார் அந்த வீட்டைச் சோதனை செய்ய சென்ற போது அந்த ஜெர்மன் தம்பதியினர் முகமூடிகள் அணிய கட்டாயப்படுத்தியதை அடுத்து சந்தேகம் அதிகரித்து, சோதனை நடத்தினர். அதன் பிறகே இந்த கொடூரம் வெளியில் தெரியவந்தது. தற்போது அந்த தம்பதியர் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய சூழ்நிலையின் அடிப்படையில், போலீசார் சோதனை நடத்தியபோது, வீடு முழுவதும் குப்பைகளால் நிரம்பியிருந்தது. வீட்டில் பல விதமான மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் வெளியில் வரும்போது, அவர்கள் இதற்கு முன்பு ஒருபோதும் வெளியே காற்றில் சுவாசிக்காதது போல் ஆழ்ந்த மூச்சு விட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது 3 சிறுவர்களும் அரசு பராமரிப்பு இல்லத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.