
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சசி தரூர் எம்பி சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான ராமச்சந்திரன் என்பவரின் குடும்பத்தினரை சந்திக்க கொச்சிக்கு சென்றார். அங்கு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த சசி தரூர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, ராமச்சந்திரனின் குடும்பத்தினரை சந்தித்தபோது அவர்கள் கருணையுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்ட சம்பவம் என்னை நெகிழ வைத்தது என்றும், இதனை நாம் பாராட்ட வேண்டும் என்றும் கூறினார். அதோடு பயங்கரவாதிகள் நம் நிலைமையை முடிவு செய்யக்கூடாது என்றும், அவர்கள் நம்மை மத அடிப்படையில் பிரிப்பதற்காக முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு நாம் இடம் கொடுக்க கூடாது என்றும் கூறினார். மேலும் நம் தேசத்தின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்றும், பயங்கரவாதிகள் நம்மை உருவாக்கவோ, மாற்றவோ அனுமதிக்க கூடாது என கூறினார்.