மத்திய அரசு  ஆதார் அட்டை விவரங்களை இன்னும் புதுப்பிக்காதவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளதாவது, ஜூன் 14, 2025 வரை ஆன்லைன் மூலம் ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம். அந்த தேதிக்குப் பிறகு புதுப்பிக்க விரும்புபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகமான ஆதார் விதிமுறைகள் படி, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தங்களது அடையாளச் சான்று (PoI) மற்றும் முகவரிச் சான்று (PoA) ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆதார் விவரங்களை புதுப்பிக்காதிருந்தால், myAadhaar இணையதளம் வழியாக இதை சுலபமாகவும் இலவசமாகவும் செய்யலாம். இதற்காக ₹50 கட்டணம் செலுத்த வேண்டியதில்லை அல்லது ஆதார் மையத்திற்குச் செல்லத் தேவையில்லை.

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பது குறித்து பின்வருமாறு :

1. வலைத்தள முகவரி: https://myaadhaar.uidai.gov.in

2. உள்நுழையவும்: உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு OTP மூலமாக உள்நுழையுங்கள்.

3. தகவல்கள் சரிபார்ப்பு: உங்கள் தற்போதைய முகவரி, PoI மற்றும் PoA ஆவணங்களை சரிபார்க்கவும்.

4. ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவும்:

பக்கத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள “Document Update” என்பதை தேர்வு செய்யவும்.

புதுப்பிக்க வேண்டிய ஆவணங்களை தேர்வு செய்து JPEG, PNG அல்லது PDF வடிவத்தில் பதிவேற்றவும்.

ஒவ்வொரு கோப்பும் 2MB-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

5. சமர்ப்பிக்கவும்: மதிப்பாய்வு செய்து, கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.

6. SRN பெறுதல்: உங்கள் கோரிக்கைக்கு Service Request Number (SRN) கிடைக்கும், இதன் மூலம் தற்போதைய நிலையைப் பின்தொடரலாம்.

உங்கள் புகைப்படம், கைரேகை போன்ற தகவல்களை மாற்ற வேண்டுமானால், நேரில் ஆதார் மையத்துக்குச் செல்லவேண்டும். இந்த ஆன்லைன் புதுப்பிப்பு முறை  ஜூன் 14, 2025 வரை மட்டுமே இலவசம். அதன் பிறகு கட்டணம் கட்ட வேண்டியிருக்கும்.

இந்த நேரத்தில், உங்கள் ஆதார் விவரங்களை சரிபார்த்து, அவை புதுப்பிக்கப்பட வேண்டியதா என்பதை உறுதிசெய்து, காலக்கெடுவுக்குள் இலவசமாக முடித்துக்கொள்ள வேண்டும். தற்போது இது ஒரு அவசியமான நடவடிக்கையாக உள்ளது.