
கேரளா மாநிலம் கோடஞ்சேரியில் ஜெயின்ட் ஜோசப் லோயர் பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அலீனா பென்னி(30) என்ற பெண் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று, அலீனா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவரது தந்தை கூறியதாவது, கடந்த 5 ஆண்டுகளாக ரூ.100 கூட சம்பளமாக வாங்கவில்லை. நிரந்தர நியமனத்திற்காக லட்சக்கணக்கில் பணம் செலுத்தியிருந்தோம். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. அவர் பெற்ற பதவி, முன்பு நீக்கப்பட்ட ஒருவரின் இடத்திற்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த நபர் மீண்டும் வேலையை மீட்டுக் கொண்டார்.
அப்போது இது பிரச்சினையாகிவிட்டது. பின்னர் தேவாலய குழு தலையிட்டு அலீனாவை தற்போதைய பள்ளியில் புதிய பதவியில் அமர்த்தினர். ஆனால் சம்பளம் கிடைக்காததால் அலீனா தினமும் அழுது கொண்டே வீட்டிற்கு வருவார் என்று வேதனையுடன் தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கு காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மிகவும் துயரமானது மற்றும் வருத்தமளிக்கிறது என்று கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். மேலும் முழுமையான விசாரணையின் அடிப்படையில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். அதோடு கல்வி அமைச்சர் சிவன்குட்டி, பொதுக் கல்வி இயக்குனருக்கு விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.