சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களமிறங்கவிருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது முதல் தேர்தலிலேயே வலுவான முத்திரை பதிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற தவெகவின் முதல் மாநாட்டைத் தொடர்ந்து, இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உற்சாகம் ஏற்படுத்தினர். மாநாட்டில் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் மூர்த்தி மாநாட்டிற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
தவெக மாநாடு குறித்து அமைச்சர் மூர்த்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் இக்குற்றச்சாட்டுகளை மறுத்தார். “நேற்று காலை முதல் மாலை வரை எனது தொகுதியில் சாந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளுக்கு கூட திமுக அல்லது எங்கள் முதலமைச்சர் அத்தகைய தடைகளை ஏற்படுத்துவது இல்லை.
யாராவது தவறு செய்திருந்தால், அதைவிட ஒரு பங்கு மேலாக செய்யவே நாங்கள் நினைப்போம். ஆனால், இத்தகைய சில்லறை வேலைகளை திமுக எப்போதும் செய்யாது. ‘சேர் கொடுக்கக்கூடாது’ போன்ற செயல்களை திமுகவின் ஒரு தொண்டன் கூட செய்யமாட்டான். இது முற்றிலும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு,” என்று அமைச்சர் மூர்த்தி திட்டவட்டமாக மறுத்து பேசினார்.
