பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதன் விசாரணை முடிந்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர் கூறியதாவது, பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகவும் வரவேற்பிற்குரியது. பெண்கள் பாதுகாப்பை உருக்குலைக்கும் குற்றாவாளிகள் நீதியின் பிடியில் இருந்து என்றும் தப்பிக்க முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

பாதிக்கப்படும் பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் முன்னுதாரண தீர்ப்பு இது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போக்சோ வழக்குகளும் தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், குற்றமிழைக்க முற்படும் கயவர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இத்தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன். நீதியை நிலைநாட்ட போராடிய அனைவருக்கும், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய மாண்புமிகு நீதிமன்றத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.