தெலுங்கானாவின் ஜக்தியல் மாவட்டத்தில், பொதுமக்கள் குறைகளை கேட்கும் கூட்டத்தின்போது, மாற்றுத்திறனாளி ஒருவர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் இழுத்து நீக்கப்பட்ட சம்பவம் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது.

முத்தியம்பேட் கிராமத்தைச் சேர்ந்த ராஜா கங்காராம் என்ற மாற்றுத்திறனாளி, கடந்த 8 ஆண்டுகளாக தனது வீட்டுக்கு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார். இதற்காக மாவட்ட கலெக்டர் சத்யபிரசாத் அவர்களிடமும் புகார் மனு அளித்திருந்தார். கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாலும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை, கலெக்டர் அலுவலகத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கங்காராம், புகார் பதிவு செய்யும் பகுதியில் தங்கியிருந்தார். அப்போது அலுவலக ஊழியர்கள் சிலர் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளது.

வீடியோவில், அவரை முதலில் கால் பகுதியில் பிடித்து இழுத்து, பின்னர் இருவர் கைகளைப் பிடித்து தூக்க முயன்றதும், மற்றோர் ஊழியர் வாகனத்தில் இருந்து அவரை தள்ளியதும் தெளிவாக காணப்படுகிறது. இதனால் அவர் சில நேரத்திற்கு வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். அதன்பின்னும் அவரை வாகனத்தில் ஏற்றாமல், நுழைவாயிலுக்கு இழுத்துச்செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதும், சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்கள் எழுந்தன. பலர் இந்தச் செயலை “மனிதத்தன்மைற்றது” என கடுமையாக கண்டித்தனர். சிலர் தெலங்கானா காங்கிரஸ் அரசை தோற்கடிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வுக்குப் பின்னர், தெலங்கானா மாநில அமைச்சர் அத்லூரி லட்சுமண் குமார் உடனடியாகச் செயல்பட்டு, கங்காராம் விவகாரத்தில் தீர்வு காணப்படும் என அறிவித்துள்ளார்.