சமூக வலைதளங்களில் தற்போது ஒரு பாதாம் பால் விற்பனையாளரின் வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜஸ்தானி பாரம்பரிய உடை அணிந்த ஒரு நபர், சிறிய ஸ்டூலில் சுழன்றவாறே ஒரு சிறிய பானையில் இருந்த பாதாம் பாலை இன்னொரு பானைக்கு ஊற்றும் காட்சி, கலை நிகழ்ச்சியைப் போல மயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ “மோண்டா ரே” என்ற இசைப் பின்னணியில் அமைக்கப்பட்டு, மிது சுனில் என்பவரால் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டது. இதுவரை 2.6 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ள இந்த வீடியோவுக்கு, “அற்புதமான செயல்திறன் கொண்ட பாதம் மில்க் தயாரிப்புகள்” என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

 

வீடியோவைப் பார்த்த பலரும், “நீங்கள் உங்கள் வேலையை நேசிக்கும்போது அது கலையாக மாறுகிறது” எனக் கருத்து தெரிவித்து அந்த மனிதரின் அர்ப்பணிப்பு மற்றும் நேர்த்தியை பாராட்டினர். சிலர், அவரது கைகளில் தீக்காயங்கள் இருந்தபோதும், புன்னகையுடன் பானத்தை பரிமாறியதை நினைவுகூறி நெகிழ்ச்சியடைந்தனர். இந்த காட்சி, ஒருவரது தொழிலும், கலையும் எவ்வாறு ஒன்றிணையக்கூடும் என்பதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு எடுத்துக்காட்டு எனக் கருதப்படுகிறது.

ஆனால், அதே நேரத்தில், சிலர் இதில் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாகவும், இவ்வாறு “ஸ்டண்ட்” செய்வது ஊக்குவிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தனர். “இதுபோன்ற விஷயங்கள் காயங்களுக்கு வழிவகுக்கும். புகழுக்காக இதை விளம்பரப்படுத்துவது தவறு” என ஒருவர் தெரிவித்தார். இருந்தாலும், அந்த மனிதரின் சுழலும் செயல்பாடும், கலையும் இணைய மக்களை கவர்ந்துள்ளது என்பது உறுதி. இந்த வீடியோ, ஒரு சாதாரண வேலைக்கு கலைநயம் எவ்வாறு சேர்க்கப்படும் என்பதற்கான அடையாளமாக தற்போது பரவலாக பேசப்படுகிறது.