விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரான திருமாவளவன், நேற்று பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்பு, ஆயக்குடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, “எனக்கும் முதலமைச்சராக வேண்டும் என்ற கனவு இருந்தது” என்று ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருந்தேன். இன்று நாம் முதல் புள்ளியை வைத்திருக்கிறோம், ஆனால் நூற்றுக்கணக்கான புள்ளிகள் வைத்தால் தான் கோலம் போட முடியும்.

ஒரு புள்ளையை வைத்துவிட்டு கோலம் போட முடியாது, அதேபோன்று அடியெடுத்து வைத்தவுடன் ஆட்சியை கைப்பற்ற முடியாது. சிலர் கட்சியை இன்னும் ஆரம்பிக்காமலேயே ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். நாம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறோம். தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் விதிகளை திருத்தக்கூடிய கட்சியாக நாம் இருக்கிறோம். அதனால் மராட்டியம், கர்நாடகா, கேரளா என தென்னிந்தியாவில் நம் கட்சி வளர்ந்துள்ளது. எனவே மக்கள் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.