ஆந்திர மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, தனது பேரன் தேவான்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயிலில் நடைபெறும் அன்னதான திட்டத்துக்காக ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கினார். அன்னதானத்தின் போது, அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து பக்தர்களுக்கு உணவு பரிமாறியதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, “திருப்பதி வெங்கடேஸ்வரரை மனதில் நிலைநிறுத்தி நான் என் வாழ்க்கையில் முன்னேறி வருகிறேன். என் பேரனுடைய பிறந்தநாளுக்கு எப்போதும் ஏழுமலையானை வழிபடுவது வழக்கம். இன்று அன்னதான திட்டத்துக்காக ஒரு நாள் செலவுக்காக ரூ.44 லட்சம் வழங்கியுள்ளோம்.

இது எனக்கு ஆத்ம திருப்தியை தருகிறது” என தெரிவித்தார். மேலும், மறைந்த என்.டி. ராமராவ் அன்னதான திட்டத்தை தொடங்கியதும், தான் பிராணதான திட்டத்தை அறிமுகம் செய்ததையும் அவர் குறிப்பிட்டார். அதேபோல், “திருப்பதியில் உள்ள மருத்துவமனைகள் மூலம் ராயல்சீமா பகுதியில் உள்ளவர்களுக்கு சிகிச்சைக்கான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சர்வதேச அளவில் பணியாற்றும் மருத்துவர்கள் திருப்பதிக்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். வேற்று மதத்தவர்கள் திருப்பதி கோயில் பணிகளில் ஈடுபடக் கூடாது என்பதற்காக கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும்.

அலிபிரி பகுதியில் கட்டப்பட்ட ஹோட்டல்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அனுமதிகளை ரத்து செய்துள்ளோம். மேலும், உலகம் முழுவதும் கோயில்கள் கட்ட புதிய அறக்கட்டளை தொடங்கப்படுவதுடன், அதன் நன்கொடைகள் ஸ்ரீவாணி அறக்கட்டளையில் இணைக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.