உடலின் வளர் சிதை மாற்றங்களுக்கும் சுறுசுறுப்பாக இயங்கவும் தூக்கம் அவசியம். உடல் நலத்திற்கும் மூளை செயல்பாட்டிற்கும் நினைவாற்றலுக்கும் தூங்கும் நேரத்தின் அளவிற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் கொரோனா பாதிப்புக்கு பின்னர் பெரும்பாலான இந்தியர்கள் ஸ்லீப் ஆப்னியா என்னும் தூக்கமின்மையால் அவதிப்படுவது ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது.

சத்தமாக குறட்டை விடுவது, பகல் நேரங்களில் தூக்க கலக்கத்துடன் இருப்பது, கால்களில் வலி ஏற்பட்டு அசைக்க முடியாமல் போவது, நள்ளிரவில் விழிப்பு வந்து மீண்டும் தூங்க முடியாத நிலை ஏற்படுவது போன்றவை ஸ்லீப் ஆப்பனியாவின் அறிகுறிகளாக உள்ளன. நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் இரண்டு கோடியே 90 லட்சம் பேர் தூக்கம் இன்மையால் அவதிப்படுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களில் 40 சதவீதம் பேர் வேலை நாட்களில் ஏழு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குவதாகவும் 60% பேர் அவ்வபோது தூக்கமின்மைக்கு ஆளாவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 46 சதவீதம் பேருக்கு மன அழுத்தம் காரணமாகவே தூக்கமின்மை ஏற்படுவதாகவும் தூக்கமின்மையால் அவதிப்படும் 85 சதவீதம் பேர் அடுத்த நாளில் தங்களின் பணியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுவதும் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

எனினும் உரிய நேரத்தில் மருத்துவரை அணுகினால் ஸ்லீப் ஆப்னியா மற்றும் இன்சோனியா போன்ற தூக்கமின்மை பிரச்சனைகளை சரி செய்ய முடியும் எனவும் மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகியவையும் நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறுகின்றனர்.