தெலுங்கானா மாநிலம் சென்னூர் பகுதியைச் சேர்ந்த பனோத் சைலஜா என்ற பெண்ணுக்கும், பஸ்ராஜூ பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஹட்கர் திருப்பதி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களுக்கு பிப்ரவரி 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென மணப்பெண்ணுக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனது. இதனால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது வயிற்றில் கட்டி இருப்பது தெரிய வந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மணமகள் வீட்டார் மணமகன் வீட்டில் சொல்லிவிட்டு திருமண தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

ஆனால் மணமகளுக்கு அறுவை சிகிச்சை செய்ததால் திருமணத்திற்கு மணமகன் வீட்டார் தயங்கிய நிலையில் திருப்பதி சைலஜாவை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்துள்ளார். இதன் காரணமாக மருத்துவர்களிடம் அனுமதி பெற்று தன் பெற்றோரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சைலஜாவை மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துள்ளார். மேலும் சைலஜாவுக்கு உடல் நலம் சரியாகும் வரை ஒரு கணவராக அவரை அருகில் இருந்து நானே பார்த்துக் கொள்வேன் என்றும் திருப்பதி கூறியுள்ளார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.