சத்தீஸ்கர் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரில் வசித்து வந்த அஸ்லம்(24) என்பருக்கு கடந்த 19 ஆம் தேதி ராஜதலா பகுதியை சேர்ந்த கக்ஷன் பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் விருந்து ராய்ப்பூர் நகரின் சாஸ்திரி பஜாரில் அமைந்துள்ள சீரத் மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணமகன் அஸ்லமும் மணமகள் கக்ஷனும் தங்களது அறையில் விருந்து நிகழ்ச்சிக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தனர்.
அப்போது அறைக்குள் திடீரென அலறல் சத்தம் கேட்டது. இதனால் வீட்டிலிருந்த அஸ்லமின் தாயார் கதவை திறக்க முயன்றார். எனினும் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தாயார் மகன் முகம் குப்புறக் கிடப்பதையும், படுக்கையில் மருமகள் சடலமாக கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதோடு அறை முழுவதும் ரத்தக்கறையாக இருந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் ஒரு கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது “புதுமணத் தம்பதிகளின் உடல்கள் அவர்களது வீட்டின் ஒரே அறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருவரது உடல்களிலும் பல்வேறு கத்திக்குத்து காயங்கள் இருந்தது. இதனிடையே இவர்களது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இவர்களது உடற்கூராய்வின் முடிவில் உண்மைகள் தெரியவரும் என்றனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.