
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் வசித்து வந்த விவசாயி சுபாஷ் உபாத்யாயை, அவரது மனைவி மற்றும் மகள் சேர்ந்து, தங்களது காதலர்களுடன் திட்டமிட்டு சுட்டுக் கொன்ற பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.
சுபாஷ் தனது மனைவியான கவிதா மற்றும் இளைய மகள் சோனத்தின் காதலை கடுமையாக எதிர்த்திருப்பதாலே இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மனைவி கவிதா, மகள் சோனம் மற்றும் குல்சார், விபின், அஜ்கர் என்கிற சிவம் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 23 ஆம் தேதி இரவு தனது பண்ணையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சுபாஷ், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடக்கத்தில் இது ஒரு அடையாளம் தெரியாத தாக்குதல் என கருதப்பட்டது. ஆனால், காவல்துறையின் தீவிர விசாரணையில், குடும்பத்திலிருந்தே இந்த கொலையின் சூழ்ச்சி நிகழ்ந்தது தெரியவந்தது.
விசாரணையில், சுபாஷின் மூத்த மகள் டோலி பட்டியல் சாதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்திருந்ததையும், அதேபோல் சோனமும் விபினை மணக்க விரும்பியதையும் போலீசார் கண்டறிந்தனர். சுபாஷ் தொடர்ந்து இதை எதிர்த்ததாலே, தாயும், மகளும் அவரை கொலை செய்ய தீர்மானித்தனர்.
போலீசார் கண்டுபிடித்த தகவலின்படி, கொலைக்குப் பிறகு விபின், சோனமும், கவிதாவும் தொடர்பு கொண்டதைத் தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் தகவல்களால் நிரூபித்துள்ளனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட 315 போர் பிஸ்டல் மற்றும் தப்பிக்க பயன்படுத்தப்பட்ட பைக் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் அரட்டைகள் மற்றும் அழைப்பு விவரங்கள் மூலம், இது முழுமையான சதி கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மீரட் மாவட்டத்திலும், மாநில அளவிலும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குடும்பத்தில் உள்ள உறவுகள் – மனைவியும், மகளும் – தங்களது காதலர்களுடன் சேர்ந்து கணவனைக் கொன்று விடும் நிலை, சமூகத்தில் ஒழுங்கு முறைகள் சீரழிந்து வருவதை காட்டுகிறது. தற்போது கைது செய்யப்பட்ட 5பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, காவல் துறை விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.