
சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிக மகிழ்ச்சியான நாடு என்ற பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கென்று உலகின் 147 நாடுகளில் மக்கள் வாழ்க்கை தரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை குறித்து, மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் அதிகபட்ச புள்ளிகள் 10 என்றால் அதில் முதலிடத்தை பின்லாந்து 7.74 புள்ளிகளுடன் உலகின் மிக மகிழ்ச்சியான நாடு என்ற தகுதியை பெற்றுள்ளது.
இதையடுத்து டென்மார்க், ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. மற்றவர்களை நம்புவது, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து உதவிகளை பெறுவது போன்றவை மக்களின் சந்தோஷத்திற்கான காரணங்களாக கூறப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை 133 வது இடமும், வங்கதேசம் 134 வது இடத்திலும், நேபாளம் 92 ஆவது இடத்திலும், சீனா 68வது இடத்திலும் உள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் 11வது இடத்தில் இருந்த அமெரிக்கா, தற்போது 24வது இடத்திற்கு சென்றுள்ளது. இங்கிலாந்து 23ஆம் இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 147 நாடுகளில் இந்தியா 118-வது இடத்தில் உள்ளது.