ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து தவுசாவுக்கு ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற தவுசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் டிரைவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தவுசா அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஷிவ்ராம் மீனா கூறியதாவது, “அந்த ஆம்புலன்ஸ் டிரைவரை நாங்கள் பணி நீக்கம் செய்து விட்டோம்.

இதனை விசாரிக்க ஒரு குழுவையும் அமைத்திருக்கின்றோம். அந்த குழு அறிக்கை சமர்ப்பித்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தேவைப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இந்த விஷயம் இன்று காலையில் தான் என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தப்படும் என உறுதி அளிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.