ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள உத்தியோக விகார் பகுதியில் வசித்து வந்த விக்ரம் (வயது 37) நவாதா (பீகார்) மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடன் அவரது மனைவி சோனி தேவி (35) மற்றும் மகள் வாழ்ந்து வந்தனர். கடந்த ஜூலை 28ம் தேதி விக்ரம் காணவில்லை என சோனி தேவி குருகிராம் போலீசில் புகார் அளித்தார்.

மேலும், மூன்று நாட்களுக்குப் பின், ஜூலை 31ம் தேதி பக்கத்து வீட்டு ரவீந்திரா (34) கடந்த மார்ச் மாதம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த வீடியோவை வைத்து மிரட்டி, கணவரை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தியதாகவும் கூறி, மேலும் ஒரு புகாரும் அளித்தார்.

இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், உண்மை முழுவதும் வெளிச்த்திற்கு வந்தது. சோனி தேவி மற்றும் ரவீந்திரா கடந்த ஒரு வருடமாக காதல் உறவில் இருந்ததாகவும், இருவரும் இணைந்து விக்ரமை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

காரணம் என்னவெனில், சோனியின் மகள் ரவீந்திராவின் கைபேசியில் அவர்களது ஆபாச வீடியோவை பார்த்து, தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் பதற்றத்தில் சிக்கிய இருவரும், யூடியூப் உள்ளிட்ட இணையதளங்களில் கொலை செய்வதற்கான வழிகளை ஆய்வு செய்து, திட்டமிட்டிருந்தனர்.

கடந்த ஜூலை 26ஆம் தேதி, விக்ரம் வேலை முடிந்து வீடு திரும்பும் போதே, ரவீந்திரா மற்றும் அவரது நண்பர்கள் விக்ரமை வாகனத்தில் ஏற்றி, கயிறு கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் ரவீந்திராவின் மாமா சண்டர்பால் வசிக்கும் மொஹம்மத்பூர் ஜர்சா கிராமத்திற்கு உடலை கொண்டு சென்றனர்.

அங்கு ஏற்கனவே தோண்டப்பட்ட பள்ளத்தில் சண்டர்பாலின் உதவியுடன் விக்ரமின் உடலை புதைத்தனர். விசாரணையின் போது, ரவீந்திரா போலீசாரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, போலீசார் அந்த இடத்திலிருந்து உடலை தோண்டி எடுத்து ஆய்வு  செய்தனர்.

இந்த கொடூரச் செயலில் சோனி தேவி, ரவீந்திரா, சண்டர்பால் (60), மற்றும் மேலும் இருவர் – மனிஷ் (19) மற்றும் பாரியாத் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சோனி தேவி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு, மற்றவர்கள் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் “ஒரு காதலுக்காக, குடும்பமும் கணவரும் துறக்கப்பட்டனர்” என்ற வருத்தமான சமூக சிந்தனையை தூண்டி விட்டது. ஒரு பெண், தனது கள்ளக்காதலனை காப்பாற்ற, கணவரை சதி திட்டமிட்டு கொலை செய்த கொடூரத்தன்மை, சமூகத்தையே உலுக்கியுள்ளது.