தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் திருமண வரன் விளம்பரம், பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. மீரட்டில் வசிக்கும் ஒரு பங்குச்சந்தை முதலீட்டாளர், தனது வருமானம் மற்றும் முதலீட்டில் அதிகரிப்பு சதவீதத்தை விளக்கி, மணமகளை தேடி செய்தித்தாளில் வெளியிட்டுள்ள இந்த விளம்பரம், மிகவும் வித்தியாசமானதாகும். அதில், அவர் ஆண்டுக்கு 29 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாகவும், தனது முதலீடு ஆண்டுதோறும் 54 சதவீதம் வளர்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விளம்பரத்தின் சிறப்பு, மணமகனை பற்றிய சாதாரண விவரங்களை மாற்றி, அவருடைய பணவரவுகளை மிகத் தெளிவாகக் கூறியிருப்பதிலேயே உள்ளது. மேலும், மணமகள் விரும்பினால் அவருக்குப் பாதுகாப்பான முதலீடுகள் குறித்து ஒரு பவர் பாயிண்ட் பிரசன்டேசனை வாட்ஸ்அப்பில் அனுப்ப தயாராக இருப்பதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். இதனால், விளம்பரம் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவியுள்ளது.
பலரும் இந்த விளம்பரத்தை வியப்புடன் வரவேற்றும், கிண்டலாகக் கூறியும் கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர். சிலர் பங்குச்சந்தை முதலீடு என்ற நிலையான தொழில் நிச்சயமாக ஆச்சரியத்தை உருவாக்கும் என்பதையும், 54 சதவீத வளர்ச்சி என்பது அடைவதற்கு சாத்தியமில்லையென்றும் கருத்து வெளியிட்டுள்ளனர். மற்றொரு தரப்பு, இத்தகைய விளம்பரங்களை நம்பிக்கையுடன் அணுகுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை தெரிவித்துள்ளது.