உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமேதி பகுதியில் கடந்த மே 3ஆம் தேதி அன்று ராம்ஜீவன் வர்மா என்ற நபரின் மகள் திருமணம் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவுக்கார 2 வாலிபர்கள், தங்களில் யார் முதலில் தந்தூரி ரொட்டியை அதிகம் வாங்குகிறார்கள் என போட்டி வைத்துள்ளனர்.

அந்தப் போட்டியில் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டி சண்டை போட்டுள்ளனர். இறுதியில் வாக்குவாதம் கை கலப்பாக மாறியுள்ளது. அதனால் சிறுவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் இரும்பு கத்தி, மற்றும் கம்புகளை கொண்டு தாக்கியுள்ளனர். அந்த பயங்கர மோதலில் சம்பவ இடத்திலேயே 17 வயதான ஆஷிஷ் என்ற வாலிபர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயமடைந்த மற்றொரு 18 வயதான ரவி என்ற வாலிபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன் பின் அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், திருமணமான பெண்ணின் தந்தை ராம்ஜீவன் கூறியதாவது, திருமண வேலையில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தபோது, இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. நாங்கள் அந்த இடத்திற்கு செல்வதற்கு உள்ளாகவே இரண்டு சிறுவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தனர் என தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.