தாமிரபரணி ஆற்றின் மோசமான நிலை குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தின் வற்றாத ஜீவநதி என செல்லமாக அழைக்கப்படும் தாமிரபரணி தூத்துக்குடி, திருநெல்வேலி  சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு முக்கியமான குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. விவசாய பாசனத்திற்கும் பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில் சமீப காலமாக தாமிரபரணி ஆறு மாசடைந்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக புகார் எழுப்பி வந்தனர். இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் மோசமான நிலை குறித்து நபர் ஒருவர் வீடியோ காட்சி ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,

ஒரு கண்ணாடி டம்ளரில் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை எடுத்து வீடியோவில் காண்பிக்கிறார். அது மிகவும் மாசடைந்து காணப்படுகிறது. அதன் பிறகு அங்கே குளித்து கொண்டிருந்த முதியவரிடம் தாமிரபரணி ஆற்றை தற்போது குடிக்க முடிகிறதா ? என கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதில் அளித்த முதியவர், குளிக்கவே முடியவில்லை எப்படி குடிக்க முடியும் ?  குளித்தாலே ஊறல் எடுக்கிறது என பதிலளித்தார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகவே ,  மிகவும் புகழ்பெற்ற நதியான தாமிரபரணி ஆறு மாசடைந்து கலங்கலான நிலையில் இருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.