தமிழகத்தில் 24 மணிநேரமும் மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நடத்துகிற மதுக்கடைகள் 24 மணி நேரமும் இயங்குவதாக உயர்நீதிமன்றம் கண்டிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் நிலைமை மோசமாகி இருக்கிறது.

ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை கொண்டு வருவோம் என கடந்த காலங்களில் சொல்லிய திமுக, இப்போது 24 மணிநேரமும் மது விற்பனையில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடானது ஆகும். மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில் உண்மையில் தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் மதுவிற்பனை நடைபெறுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை தமிழக அரசு மறுக்காதது அதிர்ச்சியளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.