தமிழக அரசு நேற்று 5 மாவட்டங்களில் நடமாடும் பன்னோக்கு கண் மருத்துவ பிரிவு வாகனங்களை தொடங்கி வைத்துள்ளது. சுமார் 1.50 கோடி செலவில் 5 மாவட்டங்களுக்கான நடமாடும் பன்னோக்கு மருத்துவ பிரிவு வாகனங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தேசிய நல்வாழ்வு குழுமத்தில் பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அதன் பிறகு 2021-22 ஆம் ஆண்டிற்கான கள அறிக்கையின் படி பார்வை இழப்பிற்கான காரணிகள் மற்றும் குறைபாட்டிற்கான முக்கிய காரணிகளில் முதியவர்களுக்கு ஏற்படும் கண்புரை ஒன்றாகும்.

இதை களையும் பொருட்டு தமிழகத்தில் கண் அறுவை சிகிச்சை தொடர்பான சிகிச்சைகளை நடமாடும் பன்னோக்கு கண் மருத்துவ வாகனங்கள் மூலம் மேற்கொண்டு அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இந்த வாகனங்கள் ஏற்கனவே திருவள்ளூர், ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதிதாக கரூர், நாகை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குளிரூட்டப்பட்ட வாகனத்தில் கண் பரிசோதனை கருவி, சர்க்கரை நோய் விழித்திரை நிழற்படங்கள் எடுக்கும் கருவி போன்றவைகள் இருக்கிறது.