அதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தொடர்ந்து போட்டி போடும் நிலையில் எடப்பாடி கை தற்போது ஓங்கி உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்ததால் அதை பயன்படுத்தி அதிமுகவின் பொது செயலாளராக மாறிவிட்டார். அதன் பிறகு தேர்தல் ஆணையம் தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு குறித்து 10 நாட்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று ஓ. பன்னீர் செல்வமும் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என வலியுறுத்தி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக தொடர்பான 18 மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது எனவும், இன்று வரை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் தொடர்கிறது எனவும் ஓபிஎஸ் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் நபரின் வேட்பாளர் மனுவில் அக்கட்சியின் அதிகாரம் மிக்க நபர்  கையெழுத்திட வேண்டும். இதை கருத்தில் கொண்டு தான் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையம் தன்னை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆனால் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளர் அங்கீகரிக்க கூடாது என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.