திமுக மாநாட்டில் மொழிப்போர், ஹிந்தி திணிப்பு குறித்து உரையாற்றிய கம்பம் செல்வேந்திரன், வைகையில் புது வெள்ளம் வருவதைப் போல மாநாட்டிற்கு இளைஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே கூடி இருக்கிற இந்த மாநாட்டில் கூடியுள்ள இளைஞர்களை பார்க்கும்போது இப்படை தோற்பின் எப்படை வெல்லும் என்று அண்ணா சொன்னார். அந்த வரிகளின் உடைய காட்சி வடிவமாக,  இன்றைக்கு இந்த மாநாடு நடக்கிறது.

இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐம்பெரும் முழங்கங்களில் ஒன்று. அதுவே எனக்கு தலைப்பாக தரப்பட்டிருக்கிறது. நான் எண்ணி பார்க்கிறேன்….  தேவர்களுக்கும்,  அசுரர்களுக்கும் நடந்த போர், 18 ஆண்டுகள் நடந்தது. ராமனுக்கும்,  ராவணனுக்கும் நடந்த போர்…. அதாவது ஆரிய மன்னன் ராமனுக்கும்,  திராவிட மன்னன் ராவணனுக்கும் நடந்த போர் 18 மாதம் நடந்தது. 

பாண்டவர்களுக்கும்,  கௌரவர்களுக்கும் இடையிலே நடந்த போர் 18 நாள் நடந்தது. ஆனால் தமிழர்களை இழிவு படுத்தினான் என்பதற்காக,  சேர மன்னன்…. சேரன் செங்குட்டுவன்…  வடவர்கள் மீது எடுத்து சென்று படையெடுப்பு படை,  படை எடுத்து பகை முடித்து நடந்த போர் 18 நாழிகை தான் நடந்தது. ஆனால் தமிழன் இந்திக்கு எதிராக தொடுத்த போர் 86  ஆண்டுகளாக நடக்கிறது. 86 ஆண்டுகள் ஆனாலும் போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஹிந்தியை எதிர்த்து தந்தை பெரியார் வால் சுழற்றினார்,   அது ஒரு காலம்….  ஹிந்திய எதிர்த்து அண்ணா வால் சுழற்றினார்,  தலைவர் கலைஞர் போராடினார்,  தளபதி போராடினார்,  அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சி இன்றைக்கு நம்முடைய உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய கரத்தில் இந்த இளைஞரணி சார்பில் தந்திருக்கிறோம் என தெரிவித்தார்.