வானில் தோன்றிய மின்னலின் பாதையை லேசர் உதவியுடன் விஞ்ஞானிகள் மாற்றி அமைத்து அதில் வெற்றி பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் மின்னலால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பத்துடன் கட்டிடங்கள், தொலைதொடர்பு சாதனங்கள், மின் இணைப்புகள் மற்றும் மின் சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்தி கோடிக்கணக்கிலான பணம் வீணாகிறது.

இதனை தடுப்பதற்கான மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான புதிய முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்க்ளின் என்பவர் 1752 ஆம் ஆண்டு மின்னல் மற்றும் மின்சாரத்திற்கு இணையான தேர்வை விளக்கினார். அதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் மின்னலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பரிசோதனைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த முறை லேசர் உதவியுடன் அதனை முயற்சித்துள்ளனர்.

இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுவிட்சர்லாந்து நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள சாண்டிஸ் மலைப்பகுதியில் உச்சியில் இருந்து மின்னலின் பாதையை மாற்றி அமைத்து அதில் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது நடந்துள்ள பரிசோதனையில் அடுத்த கட்ட ஆய்வின் பயனாக மின் நிலையங்கள், விமான நிலையங்கள், காற்றாலைகள் மற்றும் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு பாதுகாக்கும் வகையிலான நடைமுறை கண்டுபிடிக்கப்படும் என ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.