சூரியனின் செயல்பாடு குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரியளவிலான கருமையான பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். “கொரோனல் ஓட்டை” என அழைக்கப்படும் இது, பார்ப்பதற்கு சூரியனின் ஒருபகுதி காணாமல் போனது போல் காட்சியளிக்கிறது. இந்த கொரோனல் ஓட்டையை சூரியனின் தென் துருவ பகுதி அருகில் சென்ற 23ம் தேதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகமானது கண்டறிந்து உள்ளது.

கொரோனல் ஓட்டை தோன்றியதால் புவிகாந்த புயல்கள் (அ) சூரியகாற்று ஏற்படக்கூடும் என்று அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளி மண்டல நிர்வாக அமைப்பான என்.ஓ.ஏ.ஏ எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஏனென்றால் கொரோனல் ஓட்டையிலிருந்து புறப்படக்கூடிய மணிக்கு 2.9 லட்சம் கி.மீ வேகத்தில் வீசக்கூடிய சூரியகாற்றானது பூமியை நோக்கி வரும் எனவும் அது வெள்ளிக்கிழமை நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.