தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்(TNCDW )  மூலம்  சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிருக்கு பொருளாதார மேம்பாடு, தொழில் முனைவதற்கான வழிகள், நிதி சார் விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிருக்கு நிதி சார்ந்த கல்வி அறிவை வழங்க முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 11.48 லட்சம் சுய உதவிக் குழு பெண்களுக்கு நிதி சார்ந்த கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இதற்காக ரூபாய் 4.50 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதன் பேரில், தமிழகத்தில் இதுவரை 2 லட்சம் சுய உதவி குழு பெண்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் பயிற்சிகளை நிறைவு செய்ய தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.