ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 31-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை மோதுகிறது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நாளை இரவு 7.30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு எம்.எஸ் தோனி கேப்டனாகவும் இருக்கிறார். இதன் காரணமாக மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.

எம்.எஸ் தோனிக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் கடந்த முறை மும்பையில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் மைதானமே மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது. இதேபோன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடும்போதும் விராட் கோலியின் ரசிகர்கள் மைதானத்தை ஆக்கிரமித்து விடுவார்கள். இதன் காரணமாக நீட்டா அம்பானி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியின் போது மற்ற அணி ரசிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி மைதானத்தில் 2 கேலரிகளை மும்பை அணி ரசிகர்களுக்காக நீட்டா அம்பானி பதிவு செய்து வைத்துள்ளார். அதன்பிறகு மண்டல பகுதியில் மும்பை அணி ரசிகர்கள் மும்பை அணியின் ஜெர்சியை மட்டும் தான் அணிய வேண்டும் எனவும், வேறு அணியின் ஜெர்சி மற்றும் டி-ஷர்ட்களை அணியக்கூடாது எனவும் மும்பை அணியின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது மும்பையில் நடைபெறும் போட்டிகளை மற்ற ரசிகர்கள் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் தற்போது மற்ற அணி ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.