புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் வேலை வாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு பணிகளுக்கான ஆணைகளை வழங்கினார். அதன் பின் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது மாணவர்கள் படித்துவிட்டு அரசு வேலையை மட்டும் நம்பி இருக்க கூடாது.

புதிய தொழிலை தொடங்க முன்வர வேண்டும், புதிய தொழில்களை தொடங்கும் போது தான் பல பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையோடு படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புதுச்சேரியில் புதிய தொழில்களை தொடங்குவதற்கான வாய்ப்புகளை அரசு வழங்கியுள்ளது. அதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசால் நடத்தக்கூடிய எல்டிசி, யூடிசி தேர்வுகளுக்கு பி டெக், எம்டெக் படித்த மாணவர்கள் போட்டியிடுகின்றனர்.

படிப்பிற்கு தகுந்தார் போல் புதிய தொழில்களை தொடங்கும் மாணவர்கள் முன்வர வேண்டும். புதிய தொழில்களை தொடங்கும் போது நாடும் வளர்ச்சி அடையும், நமது மாநிலமும் வளர்ச்சி அடையும் என்று அவர் குறிப்பிட்டார்.