இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவைகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அடிக்கடி வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதுவரை 6 தடவைக்கும் மேல் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்ற நிலையில் நேற்றும் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சென்னை- மைசூர் வந்தே பாரத் ரயில் நேற்று மைசூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் மகேந்திரவாடி-அன்வதிர்கான் பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தபோது மாலை 6 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் சி6 பெட்டியில் 75 மற்றும் 76 ஆகிய இருக்கைகளுக்கு இடையே அமைந்துள்ள கண்ணாடி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து ஓட்டுனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் ரயில்வே போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீஸ் வலை வீசி தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.