சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.ஆர். ஸ்ரீராம், செப்டம்பர் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள், நீதிபதி ஸ்ரீராமுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இதற்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.வி. கங்காபுர்வாலா கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து மூத்த நீதிபதியான ஆர்.மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், நீதிபதி ஆர்.மகாதேவன் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி பதவியிலிருந்து விலகினார்.

இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்து வந்த கே.ஆர். ஸ்ரீராம், சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.