தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது. இந்நிலையில் மேட்டூர் ஒகேனக்கல் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வரப்படும் மீன்கள் இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது .சமீப காலமாக தரமற்ற மீன்களை விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கு உடல் நல கோளாறுகள் ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்படி மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோகுல ரமணன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமையில் அதிகாரிகள் மார்க்கெட்டில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது தரமற்ற மற்றும் அழுகிய நிலையில் மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் சுமார் 50 கிலோ எடையுள்ள அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர். மேலும் தரமற்ற மீன்களை விற்பனை செய்தால் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.