கோவை மாநகர போலீஸ் சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால், உடனடியாக தெரிவிக்கும் விதமாக மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை குறைகளை தீர்க்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் நடைபாதையை ஒட்டி இருக்கும் பூங்கா நுழைவு வாயில் அருகே ஒரு ஆண், ஒரு பெண் என 2 போலீசார் சட்டம் ஒழுங்கு, குற்றம், சுகாதாரம், மின்வாரியம் உள்ளிட்ட அனைத்துவித துறைகள் சார்ந்த பிரச்சனைகளை கேட்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கூறிய பிரச்சனைகளை பதிவு செய்து கொண்டு சம்பந்தப்பட்ட துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவிப்பார்கள். அந்த குறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் போலீசாருடன் தொடர்பில் இருப்பார்கள். போலீசாரின் இந்த புது முயற்சி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.