தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினத்தில் தசரா பண்டிகை விமர்சையாக நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று கொடியேற்றத்துடன் தசரா திருவிழா கோலாகலமாக தொடங்கியது. வருகிற 12-ம் தேதி வரை தசரா பண்டிகை நடைபெறும். அன்றைய நாள் நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுவதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முத்தாரம்மன் கோவிலுக்கு வருவார்கள்.

அதனை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னையில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் கோயம்புத்தூரில் இருந்து குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு தினமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மக்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல ஏதுவாக அக்டோபர் 13 முதல் 16 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை பயணிகள் www.tnstc.in, tnstc official செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது