டைரக்டர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா நாயகனாக நடித்திருக்கும் படம் “காசேதான் கடவுளடா”. இப்படத்தில் யோகிபாபு, சிவாங்கி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்து உள்ளார். இத்திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் சென்னை திருவான்மியூரை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், சென்னை தி.நகரை சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் தன்னை சந்தித்து காசேதான் கடவுளடா படத்தை எடுக்க ரூ. 1 கோடியை 75 லட்சம் கடன் பெற்றதாகவும், படத்தை வெளியிடுவதற்கு முன்னதாக இந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த ஒப்பந்தத்தை மீறி தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளதால் தனக்கு பெரிய நிதியிழப்பு ஏற்படும்.

ஆகவே பணத்தை திருப்பி கொடுக்கும் வரை படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என அந்த வழக்கில் அவர் கோரிக்கை விடுத்து இருந்தார். இவ்வழக்கு நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்த போது ராஜ்மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட தொகை கொடுப்பட்டிருக்கிறது. மீதிதொகை கொடுக்கும் வரை இப்படம் வெளியிடப்படாது என்ற உத்திரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்திரவாதத்தை பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த மனுவிற்கு பதிலளிக்கும் படி ராஜ்மோகன் தரப்பிற்கு உத்தரவு பிறப்பித்து வழக்கின் விசாரணையை மார்ச் 2ம் தேதிக்கு தள்ளிவைத்து ஆணையிட்டார்.