உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரை மையமாக கொண்டு ஒரு கும்பல் இளைஞர்களை குறிவைத்து வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டு வந்ததை ஒடிசாவின் பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினர் கண்டறிந்தனர். இந்த கும்பல் அரசு வேலை வழங்குவதாக சொல்லி குஜராத், கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் இருந்து கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டியது தெரியவந்தது.

நாட்டின் மிகப் பெரிய இந்த வேலைவாய்ப்பு மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், கும்பலை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு மேல் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக இந்த கும்பலை சேர்ந்த முக்கியமான குற்றவாளிகளில் ஒருவரான என்ஜினீயர் ஸபர் அகமது (25) என்பவரை தற்போது கைது செய்துள்ளனர்.

அதாவது அலிகாரில் கைது செய்யப்பட்ட ஸபர் அகமது அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒடிசா கொண்டு சென்று விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, விசாரணைக்காக அவர் புவனேஸ்வர் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்த மோசடி கும்பல் சுருட்டிய கோடிக்கணக்கான பணத்தில் ஆடம்பரமான வீடுகள், மனைகள் என வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. இது இந்தியாவிலேயே மிகப் பெரிய வேலைவாய்ப்பு மோசடி ஆகும்.