
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே உப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் டேனிபால். இவர் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர். இவர் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். இந்த நிலையில், சம்பவ நாளன்று உப்பட்டி பகுதியில் இரண்டு பள்ளி மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது டேனி பால் அவர்களை வீட்டில் கொண்டு விடுவதாக கூறி தனது காரில் வருமாறு அழைத்துள்ளார். இதனை அடுத்து இரண்டு மாணவிகளும் அவருடன் காரில் சென்றுள்ளனர்.
ஆனால் ஒரு மாணவியை மட்டும் அவரது வீட்டில் இறக்கி விட்ட டேனி பால் மற்றொரு மாணவியை காரில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அவரிடம் இருந்து மாணவி தப்பித்து ஓடியுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மூலம் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விடப்பட்டார். இச்சம்பவம் குறித்து மாணவியின் குடும்பத்தினர் டேனிபால் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் டேனிபால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். பேராசிரியர் இளம் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.