தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்தவர்  ஜோசுவா இம்மானுவேல்,  இவருடைய சொந்த ஊர் கோவில்பட்டி ஆகும் .  இந்நிலையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான  இவர் பெண்களை குறி வைத்து பில்லி சூனியம் போன்றவற்றை ஜெபம் செய்து அகற்றுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதோடு அவர்களிடமிருந்து நகைகளையும் பறித்துள்ளார்.

அதுமட்டுமின்றி படித்து முடித்த பெண்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடமும் அத்துமீறி நகை பறித்ததாக கூறப்படுகிறது. இவரால் திருநெல்வேலி தாழையூத்து பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மற்றொரு இளம் பெண்ணும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தன்னை நிர்வாணப்படுத்தி 6 பவுன் நகையை மிரட்டி பறித்துக் கொண்டதாகவும் புகார் கொடுத்துள்ளார்.

அதோடு அந்தப் பெண் தன்னுடைய சாவுக்கு ஜோசுவா இம்மானுவேல் மற்றும் அவருடன் இருந்த 4 பேர் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வெளியானது.

அதில் ஜோஸ்வா இம்மானுவேல் மற்றும் அவரது கார் டிரைவரான வினோத்குமார் என்பவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் ஜோஸ்வாவிற்கு ரூ. 54 ஆயிரம் அபராதமும், வினோத்குமாருக்கு ரூ. 3000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.