தமிழகத்தில் தமிழ் மொழி வளர்ச்சியை பற்றி பல கோரிக்கை விடுத்து பாமக நிறுவனர் இராமதாஸ் “தமிழைத் தேடி” எனும் தலைப்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்திலிருந்து மதுரை வரை 8 நாட்கள் பரப்புரை பயணத்தை அறிவித்து உள்ளார். இந்த பரப்புரை பிப்,.21-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொடங்கி மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சி, திண்டுக்கல் வழியே மதுரையில் வரும் பிப்,.28-ஆம் தேதி நிறைவடைகிறது.
தமிழில் பிற மொழிச் சொற்களின் கலப்பு, வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் பிற மொழிகளில் எழுதப்படுதல், அரசு நிர்வாகத்திலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழுக்குரிய இடம் மறுக்கப்படுவது ஆகியவை காலம் காலமாகவே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போதுள்ள தமிழ் இருப்பை பற்றி நினைக்கையில் பெரும் கவலையும், வருத்தமும் அளிக்கிறது என இராமதாஸ் கூறியுள்ளார். அனைத்து இடங்களிலும் தமிழை நிலைநிறுத்த சட்டங்கள் இயற்றியும் கூட நிலைமை மாறாதது வலியை ஏற்படுத்துகிறது எனவும் கூறி உள்ளார்.