உத்திரபிரதேசத்தில் ஜனவரி 5-ஆம் தேதி சஞ்சய் குமார் என்ற நபர் தனது தம்பி சந்தீப் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது மொபைல் போனுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து ஒரு வீடியோ வந்தது எனவும், அதில் எனது தம்பியை கயிற்றால் கட்டி வைத்துள்ளனர் எனவும், அவர் உயிருடன் கிடைக்க வேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் எனவும், அந்த எண்ணிலிருந்து மெசேஜ் வந்ததாக சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் மொபைல் போனிற்கு வந்த மிரட்டல் செய்தியில் DEATH என்று எழுதுவதற்கு பதிலாக DETH என்று எழுதி இருந்ததை காவல்துறையினர் கவனித்து படிப்பறிவு இல்லாத நபர் தான் அவரை கடத்தியுள்ளனர் என்று கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து தேடுதல் வேட்டை நடத்தி காவல்துறையினர் சந்தீப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சந்தீப்பிடம் கடத்தல் தொடர்பாக ஒரு கடிதம் எழுத சொல்லியுள்ளனர்.
அதில் DEATH என்று எழுதுவதற்கு பதிலாக DETH என்று சந்திப் எழுதியுள்ளார். இதனையடுத்து சந்தீப்பிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் தன்னைத்தானே கடத்தியதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் முதியவர் ஒருவர் மீது சந்தீப் பைக்கில் சென்ற போது மோதியதால் அவரின் மருத்துவ செலவிற்காக ₹80,000 தேவைப்பட்டதால் தனது பைக்கை விற்றுள்ளார். மேலும் பணம் தேவைப்படவே கடத்தல் நாடகத்தை அவர் நடத்தியுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.